ட்ரம்பின் வரி வேட்டை... பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களைக் கைவிட முடிவு செய்த இந்தியா
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரி விதித்த நிலையில், அமெரிக்காவிற்கு தக்க பதிலடியாக ஆயுதங்கள் மற்றும் விமானம் வாங்கும் முடிவினை இந்தியா கைவிடும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பயணம் தற்போது ரத்து
ஆயுதங்கள் கொள்முதல் குறித்த அறிவிப்புக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரும் வாரங்களில் அமெரிக்காவிற்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டிருந்தது, ஆனால் அந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மலிவு விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கி வருவதற்கு பதிலடியாக ஆகஸ்ட் 6 அன்று ட்ரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதித்தது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு இந்தியா நிதியுதவி செய்து வருவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த சூழலில், மீண்டும் 25 சதவீதம் விதிக்கப்பட்டதால், மொத்தம் 50 சதவீதம் என்ற மிக நெருக்கடியான சூழலுக்கு இந்திய ஏற்றுமதி தள்ளப்பட்டது.
ஆனால், ட்ரம்ப் அடிக்கடி குணம் மாறுவார் என்பதால், வரி விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்த 50 சதவீத வரி விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டினால், இந்தியா அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதில் சிக்கல் இருக்காது என்றே நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமதப்படுத்த இந்தியா முடிவு
ஆனால் அது எதிர்பார்ப்பது போன்று மிக விரைவில் நடக்கவும் வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள் மற்றும் விமானம் வாங்குவதை கைவிடுவதாக எழுத்துப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.
இருப்பினும், முடிவை கொஞ்சம் தாமதப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது என்றே கூறப்படுகிறது. 3.6 பில்லியன் டொலர் மதிப்பிலான விமானம் வாங்குவது தொடர்பில் அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ராஜ்நாத் சிங் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |