விராட் கோலி மீண்டும் அதிரடி... தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவுசெய்தது இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்த தொடரில் 5வது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
டேரில் மிட்சேல் சதம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, வில் யங்க் களமிறங்கினர்.
9 பந்துகளை சந்தித்த கான்வே ரன் எதுவும் எடுக்காத நிலையில் சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க் 27 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா- டேரில் மிட்சேல் இருவரும் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தது.
ரச்சின் ரவீந்திரா 75 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்சேல், சதம் அடித்து அசத்தினார். 127 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
95 ஓட்டங்களில்
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
கில் 26 ஓட்டங்களுடனும் ரோகித் சர்மா 46 ஓட்டங்களுடனும் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர்.
ஐயர் 33 ஓட்டங்கலில் வெளியேற, விராட் கோலி- ராகுல் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் 27 ஓட்டங்களுடன் வெளியேற, இந்திய அணியின் வெற்றிக்கு 81 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால், ஆட்டம் சிறிது பரபரப்பானது.
ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கோலி சதம் அடிப்பதற்கும் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கோலி சிக்ஸ் அடிக்க முயற்சிக்க, அது கேட்ச்சானது. இதனால், 95 ஓட்டங்களில் கோலி ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தொடர்ச்சியான 5வது வெற்றியை பதிவு செய்தது. மேலும், உலகக்கோப்பை தொடரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |