இலங்கை தமிழர்களுக்கான கடவுச்சீட்டு, விசா விதிகளை தளர்த்திய இந்திய அரசு
மத்திய உள்துறை அமைச்சகம், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணையில் திருத்தம் செய்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இதில், இலங்கை தமிழர்கள், பாகிஸ்தானை சேர்ந்த குடிமக்கள், திபெத்தியர்கள் உள்ளிட்டோருக்கு கடவுசீட்டு, விசா விதிகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு விதிகளில் தளர்வு
திருத்தப்பட்ட விதிகளின்படி, 2015 ஜனவரி 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்த பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் குடிமக்களுக்கு பொதுவான கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தானால் வழங்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை (CNIC) இல்லாத காரணத்தால் தங்களது பயண ஆவணங்களைப் புதுப்பிக்க முடியாத பாகிஸ்தான் நாட்டினர், நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் டிசம்பர் 31, 2009 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்தால், வழக்கமான கடவுச்சீட்டு புதுப்பித்தல் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
இதற்கு தகுதி பெற, அவர்கள் பாகிஸ்தானில் இருக்கும்போது திருமணம் செய்திருக்கவோ அல்லது அங்கு எந்தவொரு அசையாச் சொத்தையும் வாங்கியிருக்கவோ கூடாது.
மேலும், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். காவல்துறை அல்லது பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து அவர்களுக்கு எதிராக எந்தப் புகார்களும் இருக்கக்கூடாது.
மதரீதியான துன்புறுத்தல் அல்லது துன்புறுத்தல் குறித்த அச்சத்தின் காரணமாக தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து டிசம்பர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, ஜைன, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், 1959 – 2003 மே 30 ஆம் திகதி வரை நேபாள இந்திய தூதரகத்தின் அனுமதி சீட்டுகள் மூலம் இந்தியா வந்த திபெத்தியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மலேசியா அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர், 2009, டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் இந்தியா திரும்பியிருந்தால், சில நிபந்தனைகள் அடிப்படையில் கடவுச்சீட்டை புதுப்பிக்கும் கட்டாயத்தில் இருந்து விலக்கு பெறுவர்.
அந்த நாடுகளின் விதிகளின்படி, கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.