இங்கிலாந்தை பழிக்கு பழி தீர்த்த இந்தியா! ஒன் மேன் ஆர்மியாக ஜொலித்த அஸ்வின்: அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13-ஆம் திகதி துவங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா 161 ஓட்டங்கள், ரஹானே 67 ஓட்டங்கள் எடுக்க, ரிஷப் பாண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் குவிக்க, இந்திய அணி இறுதியாக 329 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
குறிப்பாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணியை கதறவிட்டார். இதனால் இங்கிலாந்து அணியில் வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டியதால், அந்தணி முதல் இன்னிங்ஸில், 134 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின் 195 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அடுத்தடுத்து வந்த புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்ட, கோஹ்லி மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.
அவருக்கு இணையாக அஸ்வின் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்த, இந்திய அணி ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்து கொண்டிருந்தது.
கோஹ்லி 62 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அஸ்வின் ஒன் மேன் ஆர்மியாக இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
இதனால் சதம் அடித்து 106 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் 482 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜோ ரூட்டை(33) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற நான்காம் நாளான இன்று இங்கிலாந்து அணி 164 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.
இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக வரும் 24-ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.



