அரிசி ஏற்றுமதியை தடை செய்துள்ள இந்தியா: கனடாவில் உருவாகியுள்ள பதற்றம்
இந்தியா, அரிசி ஏற்றுமதியைத் தடை செய்துள்ளதைத் தொடர்ந்து, கனடா, அமெரிக்கா முதலான பல நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ளதாகவும், அதனால் அரிசி விலை உயரும் வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் உருவாகியுள்ள பதற்றம்
இந்தியா, அரிசி ஏற்றுமதியைத் தடை செய்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் மக்கள் பதற்றமடைந்து, அரிசியை அதிக அளவில் வாங்கி சேமிக்க முயல்வதாக கூறப்படுகிறது.
ரொரன்றோவில், கடை ஒன்றின் மேலாளராகப் பணிபுரியும் ஸ்ரீராம் ராமமூர்த்தி, அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக தகவல் பரவியதும், மக்கள் கூட்டம் அரிசி வாங்குவதற்காக கடைகளில் அலைமோதுவதாகத் தெரிவித்துள்ளார்.
பதற்றமடைந்துள்ள மக்கள் அதிக அளவில் அரிசி வாங்க முற்பட்டதாகவும், ஆகவே, ஆளுக்கு ஒரு பை அரிசி மட்டுமே வழங்கப்படும் என தான் கூறிவிட்டதாகவும், உடனே மக்கள், வீடுகளுக்குச் சென்று தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடைக்கு அழைத்துவந்து, ஆளுக்கு ஒரு பை அரிசி வாங்கத் துவங்கியதாகவும் கூறுகிறார்.
சிலர், கடைக்கு வேறு பொருட்களை வாங்கவந்தவர்களை அணுகி, தனக்கு ஒரு பை அரிசி வாங்கித் தருமாறு கேட்கும் சம்பவங்களும் நடப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
தான் இதுவரை அரிசி விலையை உயர்த்தவில்லை என்று கூறியுள்ள ராமமூர்த்தி, ஆனாலும், தனக்கு அரிசி விநியோகம் செய்பவர்கள் விரைவில் அரிசி விலையை உயர்த்தலாம் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதனால் இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்குத் தடை?
இந்தியா மட்டுமின்றி, வியட்நாம் போன்ற சில அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளும், தங்கள் நாட்டு மக்கள் நலனைக் கருதி, அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தி வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை, உள்நாட்டில் மக்களுக்கு அரிசி விநியோகத்தில் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், உயர்ந்துள்ள அரிசியின் விலையைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரிசி விளைவிக்கும் பகுதிகள் சிலவற்றில் அதிக மழையும், சில இடங்களில் வறட்சியும் ஏற்பட்டுள்ளதால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதனால் அரிசி விலை எக்கச்சக்கமாக உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |