இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம்.., எது தெரியுமா?
India's First Sunrise Location- சூரியன் உலகின் அனைத்து நாடுகளிலும் உதித்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நேரங்களில் சூரிய உதயம் நிகழ்கிறது.
அந்தவகையில், இந்தியாவில் முதன்முதலில் சூரிய உதிக்கும் கிராமம் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் டோங். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,240 மீட்டர் உயரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது.
லோகித் நதியும் அதன் துணை நதியான சாதி நதியும் சங்கமிக்கும் பகுதிக்கு அருகில் டோங் கிராமம் உள்ளது.
இமயமலை தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த பகுதி, சீனா மற்றும் மியான்மர் நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதால், நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் டோங் கிராமத்தில் சூரிய உதயம் முன்கூட்டியே நிகழ்கிறது.
குறிப்பாக, குளிர்காலத்தில் அதிகாலை 5.30 மணியளவில் சூரியன் உதிக்கிறது. இதனால் இந்தியாவில் முதலில் சூரிய ஒளியைப் பெறும் பகுதியாக இந்த கிராமம் சிறப்பு பெற்றுள்ளது.
சூரிய உதயத்திற்கு மட்டுமின்றி, டோங் கிராமம் அதன் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது.
இங்கு மிஷ்மி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் இவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து மலைச் சிகரங்களுக்குப் பின்னால் இருந்து உதிக்கும் சூரியனை கண்டு ரசிக்கின்றனர்.
மேலும், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளுக்கு டோங் மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது.
இங்கு சூரிய உதயத்தைக் காண சுமார் 8 கிலோமீட்டர் தூரம் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும்.
டோங் கிராமத்திற்குச் செல்ல நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.
இந்த காலகட்டத்தில் வானிலை மலையேற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், வானம் தெளிவாக இருப்பதால் சூரிய உதயத்தையும் அழகாகக் காண முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |