எலிகளை கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில்.., எங்கு உள்ளது?
India’s Temple Where 25,000 Rats Are Worshipped- இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்துவமான வரலாறு மற்றும் சிறப்புகளைக் கொண்டுள்ளன.
அந்த வகையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலில் 25,000க்கும் மேற்பட்ட எலிகள் வாழ்ந்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் நகரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் தேஷ்னோக் பகுதியில் கர்ணி மாதா கோவில் அமைந்துள்ளது.
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கர்ணி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், அப்பகுதி மக்களால் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.

இந்தக் கோவிலில் 25,000க்கும் மேற்பட்ட எலிகள் வசிப்பதாக ராஜஸ்தான் சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. இங்குள்ள எலிகள் "கபா" என்று அழைக்கப்படுகின்றன.
இந்தக் கோவிலில் எலிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. அவை கோவில் வளாகம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன.
கர்ணி மாதாவின் வளர்ப்பு மகனான லக்ஷ்மன் ஒருமுறை தண்ணீர் குடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த கர்ணி மாதா, எமனிடம் சென்று தனது மகனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டியதாக நம்பப்படுகிறது.

அப்போது கர்ணி மாதாவின் ஆண் வழித்தோன்றல்கள் எலிகளாக மறுபிறவி எடுப்பார்கள் என்று எமன் வரம் அளித்ததாக ஒரு புராணக் கதை கூறுகிறது.
இதன் காரணமாகவே இக்கோவிலில் உள்ள எலிகள் கர்ணி மாதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றன.
இந்தக் கோவிலில் உள்ள எலிகளுக்கு பக்தர்கள் பால், இனிப்புகள் உள்ளிட்ட உணவுகளை வழங்குகின்றனர்.
மேலும், எலிகள் சாப்பிட்ட உணவை உண்பது அதிர்ஷ்டத்தையும், கடவுளின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோவிலில் எலிகளுக்குத் தனி மரியாதை அளிக்கப்படுகிறது.

ஒருவர் தவறுதலாக ஓர் எலியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக இறந்த எலியின் உருவத்தைப் போன்ற தங்கச் சிலையை கோவிலுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இங்குள்ள மரபாகும்.
இந்தக் கோவிலில் அழகிய பளிங்குக் கற்கள் மற்றும் வெள்ளி அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பக்தர்களை மட்டுமின்றி, ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் இந்தக் கோவில் ஈர்த்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |