சீனாவை தாக்குவதற்கு... ரூ.32,000 கோடி மதிப்பில் டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் (Predator MQ-9B) டிரோன்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவாட் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற போது, அதிபர் ஜோ பைடனை சந்தித்து அமெரிக்காவுக்கு சொந்தமான எம்க்யூ - 9பி (MQ-9B) ரக ட்ரோன்களை வாங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா தயாரிப்பில் உருவாகும் எம்க்யூ-9பி ப்ரீடேட்டர் டிரான்களை அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் பயன்படுத்துகின்றன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் கண்காணிப்பு பணிக்கு ப்ரீடேட்டர் டிரோன்களை ஈடு படுத்த இந்தியா முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த 9 -ம் திகதி அன்று பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழுவானது, அமெரிக்காவிடம் இருந்து 31 ப்ரீடேட்டர் டிரோன்களை வாங்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் டிரோன்கள் வாங்க இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு விநியோகம் செய்யப்படும்.
அம்சங்கள்
* இந்த ட்ரோன்களானது, செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும். இது, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மிக துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.
* இந்த MQ-9B ட்ரோன்களானது பயணியர் விமானங்களை விட தூரமாகவும், 50,000 அடி உயரத்திலும், தொடர்ச்சியாக 40 மணி நேரம் பறக்கும் திறனும் உடையது.
* இது, மணிக்கு 442 கி.மீ வேகத்தில் செல்வதோடு 1,700 கிலோ வெடிகுண்டுகளையும் சுமந்து செல்லும். இதற்கு 2,000 கி.மீ வரை எரிபொருள் நிரப்ப வேண்டியதில்லை.
* நிலத்தில் இருந்து 800 அடி உயரத்தில் பறந்தாலும் கண்டுபிடிப்பது கடினம். இது முக்கியமாக வான்வழி தாக்குதல் மட்டுமன்றி, வானில் இருந்து நிலத்தை நோக்கியும் தாக்கக்கூடியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |