100வது டெஸ்ட் போட்டியில் கால்பதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்: உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி விளையாடுவதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100 டெஸ்ட் போட்டி என்ற சிறப்பை பெற்றுத்தரவுள்ளது.
145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 70 வீரர்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது விராட் கோலி 71 வீரராகவும் இந்திய வீரர்கள் வரிசையில் 12வது வீரராகவும் இணையவுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள விராட் கோலி, என் வாழ்நாளில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நினைத்துப் பார்த்ததில்லை என்றும், இதற்குப் பின்னால் கடின உழைப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னும் உயிர்ப்புடன் இருக்க விராட் கோலி போன்ற வீரர்கள்தான் முக்கிய காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.