ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா: அடுத்த ஆண்டு இந்தியா வரும் டிரம்ப்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைன் ரஷ்யா போரை மறைமுகமாக ஊக்குவிப்பதாக குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50% வரிவிதிப்பை அறிவித்தார்.
இது இருநாடுகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரு நாட்டு தலைவர்களும், உயர் பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வருவதாக டிரம்ப் அவ்வப்போது அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டதாக நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்
அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர் என்றும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது நல்ல விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மோடி தன்னை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அடுத்த ஆண்டு தான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், உலக அளவில் சமிபத்திய 8 போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும், அவற்றில் 6 போர்களை வரி விதிப்புகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |