உங்கள் நாட்டிலேயே இனவெறுப்பு... குறை சொன்ன சுவிட்சர்லாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா
ஐ.நா சபையில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து விமர்சனம் முன்வைத்த சுவிட்சர்லாந்துக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்தியா.
குறை சொன்ன சுவிட்சர்லாந்து
செவ்வாயன்று, ஐ.நா சபையில் சுவிட்சர்லாந்தின் பிரதிநிதி இந்தியா தனது சிறுபான்மையினரை பாதுகாக்கவேண்டும் என்றும், கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தக்க பதிலடி கொடுத்த இந்தியா
சுவிஸ் பிரதிநிதிக்கு பதிலளித்துள்ள ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்து இனவெறுப்பு, சில தரப்பினர் மீதான பாரபட்சம், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு ஆகிய பிரச்சினைகள் தொடர்பான சவால்களை எதிர்கொண்டுள்ளதை நினைவுபடுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் கருத்துக்கள் வியப்பை ஏற்படுத்துவதாகவும், அவை மேலோட்டமானவை மற்றும் முழுமையாக தெரிந்துகொள்ளாமல் கூறப்பட்ட கருத்துக்கள் என்றும் தெரிவித்துள்ள தியாகி, சுவிட்சர்லாந்து முதலில் தனது நாட்டில் நிலவும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் நெருங்கிய நண்பரும் கூட்டாளியுமான சுவிட்சர்லாந்து கூறிய ஆச்சரியமான, மேலோட்டமான மற்றும் தவறான கருத்துக்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் சுவிட்சர்லாந்து, இந்தியாவின் யதார்த்தத்திற்கு நியாயம் செய்யாத, அப்பட்டமான பொய்யான கதைகளால் கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.
அதற்கு பதிலாக, இனவெறுப்பு, சில தரப்பினர் மீதான பாரபட்சம், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு போன்ற தன் சொந்த சவால்களில் சுவிட்சர்லாந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் தியாகி கூறியுள்ளார்.
அத்துடன், சுவிட்சர்லாந்தின் அத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க உதவவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |