விண்ணில் இந்திய செயற்கைகோள்களுக்கு ஆபத்து - 50 மெய்க்காப்பாளர் செயற்கைகோள்களை அனுப்ப திட்டம்
விண்ணில் இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைகோள்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய செயற்கைகோள்களுக்கு ஆபத்து
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக விண்வெளிக்கு பல்வேறு செயற்கைகோள்களை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் அண்டை நாடொன்றின் செயற்கைகோள், 1 கி.மீ தொலைவில் இந்தியாவின் செயற்கைக்கோளை மோதுவது போல் சென்றது.
இதன் காரணமாக, விண்வெளியில் உள்ள இந்தியாவின் செயற்கைகோள்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை இந்திய அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள்
இந்த திட்டத்தின்படி, 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்கி புவியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைகோள்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்தும் ரூ.27,000 கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டிலே முதல் மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துரிதப்படுத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ பணியாற்றி வருகிறது.
நிகழ்நேர அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் விரைவான பதில் திறன்களை வழங்க, இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள் இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்களுடன் சுற்றுப்பாதையில் இயங்கும்.
அதிநவீன சென்சார்களுடன் பொருத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், சிக்னல் ஜாம்மிங், சைபர் தாக்குதல்கள், எதிரி செயற்கைக்கோள்களின் குறுக்கீடு போன்ற அபாயங்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒளி கண்டறிதல் மற்றும் ரேஞ்சிங் (LiDAR) அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த லேசர் அடிப்படையிலான சென்சார்கள் அருகிலுள்ள சுற்றுப்பாதை பொருட்களின் துல்லியமான 3D வரைபடங்களை உருவாக்கும். இது வழக்கமான ரேடாருடன் ஒப்பிடும்போது வேகமான மற்றும் துல்லியமான அச்சுறுத்தல் கண்டறிதலை செயல்படுத்தும்.
அண்டை நாடுகளின் விண்வெளி பலம்
பூமியின் சுற்றுப்பாதையில், இந்தியாவின் 100க்கும் அதிகமான செயற்கைகோள்களும், சீனாவின் 930 செயற்கைகோள்களும் சுற்றி வருகிறது. அதேவேளையில், பாகிஸ்தானின் வெறும் 8 செயற்கைகோள்கள் மட்டுமே சுற்றி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் போது, இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு வகித்தது. இதற்காக 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்ததாக இஸ்ரோ இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
அதேவேளையில், சீனா தனது செயற்கைகோள் கண்காணிப்பு மூலம் பாகிஸ்தானுக்கு உதவியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி குழு கூறியது.
சீனாவின் செயற்கைக்கோள் திட்டம் அளவிலும் நவீனத்திலும் வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் எச்சரித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |