வெறித்தனமான பந்துவீச்சு! 85 ஓட்டங்களில் மடிந்த ஸ்காட்லாந்து., 7.1 ஓவரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா..
கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய இன்றைய போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்தை வெறும் 85 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் 2021 டி20 உலக கோப்பை 'சூப்பர் 12' தொடறில், க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.
க்ரூப் 1-ல் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதேபோல் க்ரூப் 2-ல் அரையிறுதிக்கு முன்னேற, ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், துபாய் அரங்கத்தில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க பெரிய வெற்றியை பெறவேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டுவருகிறது இந்திய அணி.
இந்த டி20 உலக கோப்பை தொடரிலேயே முதல் முறையாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பாடத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆரம்பத்திலேயே முதல் விக்கெட்டாக ஸ்காட்லாந்து கேப்டன் கோயட்ஸரை வீழ்த்தி விக்கெட் வேட்டையை தொடங்கிவைத்தார் பும்ரா.
அதன்பின்னர் அதிரடியாக ஆடிய முன்சியை (19 பந்தில் 24 ஓட்டங்கள்) முகமது ஷமி வீழ்த்தினார். ஸ்காட்லாந்து வீரர்களை எளிதாக ஓட்டங்கள் அடிக்கவிடாமல் செம டைட்டாக வீசினர் இந்திய பவுலர்கள்.
இந்த போட்டியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி ஆடிய நிலையில், மிடில் ஓவர்களில் ஜடேஜா, அஷ்வின் மற்றும் வருண் ஆகிய மூவருமே நன்றாக வீசினர். குறிப்பாக அபாரமாக பந்துவீசிய ஜடேஜா, 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். காலம் மெக்லியாடை 17வது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்திய ஷமி, 3வது பந்தில் அலாஸ்டைர் இவான்ஸை வீழ்த்தினார்.
2வது பந்தில் ஷாஃபியான் ஷாரிஃப் ரன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரிலேயே கடைசி விக்கெட்டை பும்ரா வீழ்த்த, வெறும் 85 ஓட்டங்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து அணி.
86 ஓட்டங்கள் என்ற இந்த மிக எளிய இலக்கை இந்திய அணி 7.1 ஓவரில் அடித்தால், ஆஃப்கானிஸ்தானின் நெட் ரன்ரேட்டை விட அதிகம் பெறலாம்.
அப்படி வெற்றி பெறும்பட்சத்தில் கடைசி போட்டியில் நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே போதுமானது.
ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.