கப்பல்களுக்கான மின்சார உந்துவிசை அமைப்பு.., இந்தியா, இங்கிலாந்து இடையே புது ஒப்பந்தம்
கப்பல் என்ஜினுக்கான மின்சார உந்து விசை அமைப்பின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியா, இங்கிலாந்து ஒப்பந்தம்
எதிர்கால இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான மின்சார உந்துவிசை அமைப்புகளை (electric propulsion systems) வடிவமைத்து மேம்படுத்துவதில் இணைந்து பணியாற்ற இந்தியாவும், இங்கிலாந்தும் ஒப்பந்தத்தில் (SoI) கையெழுத்திட்டுள்ளன.
நேற்று (நவம்பர் 28) இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மோத் துறைமுகத்தில் இரு நாடுகளின் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் தங்கள் பாதுகாப்பு கூட்டாண்மைக்கு ஆதரவளிக்க வந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலர் (கடற்படை அமைப்புகள்) ஸ்ரீ ராஜீவ் பிரகாஷ் மற்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கப்பல் செயல்பாடுகள் மற்றும் திறன் ஒருங்கிணைப்பு இயக்குநர் ரியர் அட்மிரல் ஸ்டீவ் மெக்கார்த்தி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இதன் மூலம் நவீன தொழிட்நுட்பத்தின் அடிப்படையில் உள்நாட்டிலேயே மின்சார இன்ஜின்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
எதிர்காலத்தில் கடற்படைக்கு தேவையான கப்பல்களை வடிவமைப்பதில் மின்சாரத்தில் இயங்கும் இன்ஜின்களை தயாரிக்கவும், அதன் வடிவமைப்பு, உருவாக்கம் போன்ற பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது" என்று கூறியுள்ளனர்.
இந்த ஒப்பந்தம், மின்சார உந்துவிசை அமைப்புகளில் கவனம் செலுத்தி, கடற்படைக் கப்பல்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இரு நாடுகளும் ஒத்துழைக்க உதவும்.
இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளில் இது ஒரு மைல்கல் நடவடிக்கையாக இருப்பதால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் நம்புகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |