ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் திகதி அறிவிப்பு! சோகத்தில் ரசிகர்கள்
2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை குரூப் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டி 2021 டிசம்பர் மாதம் 23ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகள் இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் விளையாடும்.
‘குரூப் ஏ’ அணிகள்- ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் இடம்பிடித்துள்ளன.
‘குரூப் பி’ அணிகள்- வங்கதேசம், நேபாளம், குவைத், இலங்கை இடம்பிடித்துள்ளன.
குரூப் சுற்றில், தங்கள் குரூப்பில் இடம்பெற்றுள்ள அணியுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும்.
குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
குரூப் ஏ-வில் இடம்பிடித்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 2021 டிசம்பர் 25ம் திகதி துபாய் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி மட்டுமே நேரலையில் ஒளிபரப்பாகும் என்பதால், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் நேரலையில் காண முடியாது என கூறப்படுகிறது.
இது இரு நாட்டு ரசிகரள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1989 முதல் இதுவரை 8 முறை நடந்துள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை அதிகபட்சமாக இந்திய 6 முறை வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஒரு முறை வென்றுள்ளது, 2012ல் இறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.