பயம் காட்டிய நியூசிலாந்து: இறுதிப்போட்டிக்கு அதிரடியாக நுழைந்த இந்தியா
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் அரையிறுதியில், இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.
விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர்
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது.
இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 79 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி சதமடித்த விராட் கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முறையே, 117 ஓட்டங்கள் மற்றும் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் யாதவ் ஒற்றை இலக்கத்தில் ஏமாற்ற, சுப்மன் கில் மீண்டும் களமிறங்கினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ஓட்டங்கள் குவித்தது.
ஷமி மட்டும் 7 விக்கெட்டுகள்
கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களுடனும் சுப்மன் கில் 80 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 398 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இதில் ஷமி பந்துவீச்சில் கான்வே 13 மற்றும் ரச்சின் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க கேன் வில்லியம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வில்லியம்சன் 69 ஓட்டங்களுடன் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 119 பந்துகளை எதிர்கொண்டு 134 ஓட்டங்கள் குவித்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.
கிளென் பிலிப்ஸ் மட்டும் 41 ஓட்டங்கள் சேர்க்க, எஞ்சிய வீரர்களின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. இறுதியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்த ஆட்டத்தில் ஷமி மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |