இலங்கை அணியை கதறவிட்ட இந்திய அணி: வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தல்
இந்தியா-இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
பேட்டிங்கில் ஜொலித்த இந்தியா
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை விளையாடுவதற்காக இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இதில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 390 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை இலங்கை அணிக்கு எதிராக நிர்ணயித்தது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 42 ஓட்டங்களும், மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 97 பந்துகளில் 116 ஓட்டங்களும் குவித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
இதையடுத்து முதல் விக்கெட் இழப்பிற்கு களமிறங்கிய விராட் கோலியும் தனது அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்தார்.
110 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என விளாசி 166 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா
391 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்த போட்டி மிகப்பெரிய வரலாற்று சறுக்கலாக மாறிவிட்டது.
முன்னணி ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ, அபிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசங்கா ஆகிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதை தொடர்ந்து இலங்கை அணி 22 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 73 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி இலங்கையை 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
Captain @ImRo45 collects the trophy as #TeamIndia seal the @mastercardindia #INDvSL ODI series 3️⃣-0️⃣??
— BCCI (@BCCI) January 15, 2023
Scorecard ▶️ https://t.co/q4nA9Ff9Q2 pic.twitter.com/KmCAFDfpUe
இலங்கைக்கு எதிராக 317 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியே இதுவரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.