பந்துவீச்சால் பஞ்சராகிய தென்னாப்பிரிக்க அணி: அபார வெற்றியை பதிவு செய்து பலிவாங்கிய இந்திய அணி!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐந்து டி-20 போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, இன்று இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியை விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யவே, முதல் பேட்டிங்கில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதங்களை கடக்கவே இந்திய அணி வலுவான அடித்தளத்தை பெற்றது.
இருப்பினும் அடுத்தடுத்த வந்த வீரர்களில் ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வழங்க தவறியதை தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணியில் அதிகப்பட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என விளாசி 57 ஓட்டங்களை அணிக்காக குவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கொண்டு இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் எந்தவொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதை அடுத்து 19.1 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து வெறும் 131 ஒட்டங்கள் மட்டுமே குவித்த நிலையில் இந்திய அணியிடம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகப்பட்சமாக ஹென்ரிச் கிளாசென் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒற்றை சிக்ஸருடன் 29 ஓட்டங்களை குவித்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ஷல் படேல் 4 விக்கெட்களையும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்களையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி 2 வெற்றியையும் இந்திய அணி 1 வெற்றியையும் பெற்று 2-1 கணக்கில் தென்னாப்பிரிக்க அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள்: கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும்: ரஷ்யா தகவல்!
இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை விழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.