பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விமானம் விவகாரம்: இந்திய சிறுவன் மாயமானதாக வெளியான தகவலால் பரபரப்பு
துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், அந்த விமானத்தில் தனியாக பயணித்த இந்தியச் சிறுவன் ஒருவன் மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விமானம்
துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களாக பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில், 276 பேருடன் அந்த விமானம் மும்பை திரும்பியது. மீதமுள்ளவர்களில் சிலர் ஆட்கடத்தல் தொடர்பில் பிரான்சில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள், மற்றவர்கள் பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார்கள்.
AFP
அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டே மாநிலைங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆகவே, இரண்டு மாநில பொலிசாரும் அவர்களிடம் தனித்தனியே விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.
அதாவது, இந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து நிகராகுவா நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் செல்லும் திட்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் மாயமானதாக வெளியான தகவல்
இந்நிலையில், அந்த விமானத்தில் தனியாக பயணித்த இரண்டு வயது இந்தியச் சிறுவன் ஒருவன் மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.அவனை பொலிசார் தேடிவருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், குஜராத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் வீடு திரும்பிவிட்டதாகவும், அவன் தன் பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளதாகவும், பொலிசார் தெரிவித்துள்ளதாக தற்போது ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |