கனடாவில் சூரிய அஸ்தமனத்தைக் காணச் சென்ற இந்திய சகோதரர்கள்: ஒருவரின் வாழ்வே அஸ்தமனமாகிப்போன சோகம்
கனடாவில் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்ற இந்திய சகோதரர்களில் ஒருவர் பரிதாபமாக பலியான ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தியாவிலுள்ள, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் Barot குடும்பத்தினர். 2020ஆம் ஆண்டு Harshil Barot மற்றும் அவரது சகோதரரான Zarin Barot ஆகிய இருவரும் கனடா வந்துள்ளார்கள்.
Harshil சமீபத்தில் வேலை காரணமாக ஹாலிஃபாக்சுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த வாரம், தம்பியைக் காண்பதற்காக Zarin ஹாலிஃபாக்சுக்கு வர, அவர்களும் அவர்களது நண்பர்கள் சிலருமாக பிரபல சுற்றுலாத்தலமான Peggys Cove என்ற இடத்துக்குச் சென்றுள்ளார்கள்.
சூரியன் அஸ்தமனமாவதைக் காண்பதற்காக இருவருமாக கடலுக்கு அருகில் சற்று உயரமாக இருந்த பாறை ஒன்றின் மீது ஏற, திடீரென Harshil வழுக்கி விழுந்திருக்கிறார். தம்பியைக் காப்பாற்றுவதற்காக Zarin முயல, அவரும் வழுக்கி விழ, இருவரும் கடலுக்குள் விழுந்திருக்கிறார்கள்.
ஒருவர் கையை ஒருவர் பிடிக்க முயன்றும், முடியாமல் Harshil தண்ணீரில் அடித்துச் செல்லப்பட, Zarinஉடைய கால் ஒரு பாறை இடுக்கில் சிக்கிக்கொள்ள, அவர் மயங்கியிருக்கிறார்.
கண் விழிக்கும்போது, தான் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதை உணர்ந்த Zarin, தன் தம்பி இறந்துபோனார் என்ற விடயத்தை அப்போதுதான் அறிந்துகொண்டிருக்கிறார்.
உண்மையில் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் உள்ளனவாம். ஆனால், இருட்டில் அவை தெரியவில்லை என்று கூறும் Zarin, அங்கே ரப்பர் டியூப் போன்ற உபகரணங்கள் ஏதாவது வைக்கப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும் என கருதுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் இனி ஏற்படக்கூடாது என்கிறார் அவர்.
எப்படியும், அன்புத் தம்பியுடன் சூரிய அஸ்தமனத்தைக் காண வந்த நிலையில், தம்பியின் வாழ்வே அஸ்தமனமாகிப்போக கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் Zarin.