2 பில்லியன் டொலர் மதிப்பிலான நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்ற இந்திய கோடீஸ்வரர்: விரிவான பின்னணி
முன்னாள் கோடீஸ்வர தொழிலதிபரான BR Shetty-யின் அதிரடி வளர்ச்சியும் அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சியும் கடந்த தசாப்தத்தில் பெருநிறுவனங்களின் சரிவின் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு 18,000 கோடி
ஏறக்குறைய ஒன்றுமில்லாதா நிலையில் இருந்து தொடங்கி, கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர் பிஆர் ஷெட்டி. வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 18,000 கோடிக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் அவருக்கு ஆடம்பர வில்லாக்களும், பல எண்ணிக்கையில் சொகுசு கார்களும், தனியார் விமானம் ஒன்றும் இருந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு குறுந்தகவலால் பிஆர் ஷெட்டியின் மொத்த சாம்ராஜ்யமும் ஆட்டம் கண்டது.
தனது நிறுவனத்தையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். முன்னர் 2 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்ட நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.
வேலை தேடி ஐக்கிய அமீரகத்திற்கு செல்லும் போது பிஆர் ஷெட்டியிடம் வெறும் 8 டொலர் மட்டுமே கைவசம் இருந்துள்ளது. ஆனால் அதன் பின்னர், கடுமையான உழைப்பால் NMC Health என்ற மருத்துவமனை குழுமத்தை நிறுவினார்.
இதுவே அவரை உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற செய்தது. துபாய் மாகாணத்தின் அடையாளமான Burj Khalifa-வில் 25 மில்லியன் டொலர் செலவிட்டு இரண்டு முழு தளங்களையும் சொந்தமாக்கினார்.
முறைகேடுகளில் ஈடுபட்ட ஷெட்டி
அத்துடன் துபாயின் உலக வர்த்தக மையம் மற்றும் பாம் ஜுமேரா ஆகியவற்றிலும் அவருக்கு சொத்துக்கள் இருந்தன. ஆனால் 2019ல் அவருக்கு நெருக்கடி தொடங்கியது.
பிரித்தானியாவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான Muddy Waters பதிவு செய்த குறுந்தகவல் ஒன்று, பிஆர் ஷெட்டியின் அதுவரையான கோடீஸ்வரர் பிம்பத்தை அசைத்தது.
NMC Health நிறுவனத்தின் அதுவரையான நிதி தொடர்பான நடவடிக்கைகளை Muddy Waters அம்பலப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தனது நிதி நிறுவனமான Finablr Plc-ஐ விற்க முடிவு செய்தார் பிஆர் ஷெட்டி.
இந்த நிறுவனத்தின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர் என முன்னர் இருந்த நிலையில், ஒரு இஸ்ரேலிய - அமீரக நிறுவனத்திடம் வெறும் 1 டொலருக்கு (அப்போது 74 ரூபாய்) விற்றுள்ளார்.
நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட ஷெட்டி, இறுதியில் ஐக்கிய அமீரகத்தில் தமது மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு இந்தியாவுக்கு தப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தற்போதும் அவரை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணை நிலுவையில் உள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |