பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி
பனிப்புயலையும் பொருட்படுத்தாமல், பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி ஒருவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி செய்த உதவி
கடந்த சனிக்கிழமை இரவு, கனடாவின் கால்கரியில் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில், டெக்ஸி சாரதியும் இந்திய வம்சாவளியினருமான ஹர்தீப் சிங் தூருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

பிரசவ வலியில் துடித்த பெண்ணொருவரை சிங்குடைய டெக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வரமுடியுமா என அந்தப் பெண்ணின் கணவர் கேட்க, கடும் பனிப்புயல் வீசிக்கொண்டிருந்த நிலைமையிலும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதித்துள்ளார் சிங்.
ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே, காரின் பின் சீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார் அந்தப் பெண்.

விரைவாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்ததால் அந்தப் பெண்ணின் கணவர் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கும் சிங், பின்னர், தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தன்னை அழைத்து தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது காரில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை என கூறும் சிங், அது தனது வாழ்வில் மறக்க இயலாத தருணம் என நெகிழ்கிறார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தூதரான அஜித் சிங் உட்பட, பலரும், அந்த பெண்ணுக்கு உதவிய டெக்ஸியின் சாரதியான சிங்குக்கு புகழாரம் சூட்டிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |