கனடாவில் சீக்கிய இளைஞர் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்
கனடாவில் சீக்கிய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், அது, இனவெறுப்பு நோக்கம் கொண்ட தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது. அந்த இந்திய இளைஞர் தாக்கப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பேருந்தில் வைத்தே தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Kelowna நகரில் 17 வயது சீக்கிய மாணவர் ஒருவர் பேருந்து ஒன்றில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது, இரண்டு இளைஞர்கள் அவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளார்கள். பின்னர், அவர் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்கள்.
அவரை மிரட்டுவதும், அவர் அருகே நின்றுகொண்டு அவரை வீடியோ எடுப்பதுமாக அவருக்கு தொல்லை கொடுத்தும், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லையாம். பேருந்து சாரதி, அந்த இளைஞருக்கு உதவுவதற்கு பதிலாக, அவரையும் அவரை மிரட்டிய இளைஞர்களையும் பேருந்திலிருந்து இறக்கிவிட்டுள்ளார்.
பேருந்து நிலையத்திலும் தாக்குதல்
கீழே இறங்கிய பின்னரும், பேருந்து நிலையத்தில் வைத்தும் அந்த இளைஞர் மீது தாக்குதல் தொடர்ந்துள்ளது. அவரை அடித்து, மிதித்து, அவர் மீது பெப்பர் ஸ்பிரேயும் அடித்துள்ளார்கள் அவர்கள். வழிப்போக்கர்கள் தடுத்த பிறகே அந்த இளைஞர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இளைஞர் தாக்கப்பட்டதற்கு, வான்கூவரிலுள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக இடுகை ஒன்றில் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், Kelownaவின் இந்திய மாணவர் தாக்கப்பட்டதை இந்திய தூதரகம் வன்மையாக கண்டிக்கிறது. கனேடிய அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |