சுவிஸில் மிக ஆபத்தான இந்தியாவில் உருமாறிய கொரோனா: உறுதி செய்த சுகாதாரத்துறை
இந்தியாவில் உருமாற்றம் கண்ட மிக ஆபத்தான கொரோனா தொற்று, சுவிட்சர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த தகவலை சுவிஸ் சுகாதாரத்துறை தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. பயணிகள் விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு குறித்த இந்திய உருமாற்றம் கண்ட தொற்று வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அது எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் தெளிவான பதில் இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் தற்போது எந்த மண்டலத்தில் வசிக்கிறார் என்பது தொடர்பிலும் தகவல் இல்லை என்றே சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
புதன்கிழமை, அலைன் பெர்செட் சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என்று கூறி இந்தியாவை ஆபத்து பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவை நியாயப்படுத்தினார்.
இதனிடையே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எவாஞ்சலிகல் மக்கள் கட்சியின் தலைவரான மன்ஃப்ரெட் வெபர் (Manfred Weber), இந்தியாவுடனான அனைத்து விமான போக்குவரத்தையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. சனிக்கிழமையன்று, 24 மணி நேரத்திற்குள் 2,624 இறப்புகளுடன் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
இதற்கிடையில் மத்திய அரசு நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவமனைகளுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும் ஆபத்து கட்டத்தில் இருப்போர்களுக்காக கூடுதல் ஆக்ஸிஜனை வழங்க முயற்சித்து வருகிறது.
சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் புதிதாக 340,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.