பிள்ளைகளைக் காண கனடா வந்த இந்திய தம்பதி படுகொலை: பொலிசார் தற்போது வெளியிட்டுள்ள தகவல்
கனடாவில் கல்வி கற்கும் தங்கள் பிள்ளைகளைக் காணவந்த இந்திய தம்பதியர் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பொலிசார் தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பிள்ளைகளைக் காண கனடா வந்த இந்திய தம்பதி படுகொலை
ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் கனடா வந்துள்ளனர்.
கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் திடீரென வாகனம் ஒன்றில் வந்த சிலர், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
தகவலறிந்து பொலிசார் வந்தபோது, சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தார். அவரது மனைவியையும், வீட்டில் அவர்களுடன் இருந்த அவர்களுடைய மகளையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கௌர் சிகிச்சை பலனின்றி இரண்டு வாரங்களுக்குப்பின் உயிரிழந்துவிட்டார். அவரது மகள் இன்னமும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
தாக்குதல்தாரிகள் 30 முறை துப்பாக்கியால் சுட்டிருந்த நிலையில், 20 குண்டுகளும் கௌர் மீதுதான் தாக்கியிருந்தன. அவரது உடல் சல்லடையாக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உள்ளுறுப்புகள் அனைத்துமே சேதமடைந்திருந்தன.
மேலும், கடுமையாக தாக்கப்பட்டுள்ள அவரது மகள் பிழைத்தாலும்கூட, அவர் சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆகும் என்று கூறும் பொலிசார், தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளான அவர் இதுவரைஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தபோது, தம்பதியரின் மகன் வீட்டில் இல்லாததால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
பொலிசார் தற்போது வெளியிட்டுள்ள தகவல்
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிசார் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். அதாவது, வேறு யாரையோ கொல்வதற்கு பதிலாக, ஒரு கும்பல் தவறுதலாக சிங் குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ள பொலிசார், தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய வாகனம் தீவைத்துக்கொளுத்தப்பட்ட நிலையில் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகள் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |