கனடா விசா பெற்றுத்தருவதாக பணம் வாங்கிய ஏஜண்ட்: இந்திய தம்பதியருக்கு கிடைத்த ஏமாற்றம்
இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஒரு தம்பதியரை கனடாவுக்கு அனுப்புவதாக லூதியானாவைச் சேர்ந்த ஒரு ஏஜண்ட் ஏமாற்றிவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கனடா செல்ல விரும்பிய தம்பதியர்
அமிர்தசரஸைச் சேர்ந்த தியான் சிங் (Dhyan Singh) தன் மனைவியாகிய ஜக்ரூப் கௌர் (Jagroop Kaur) உடன் கனடாவுக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். அதற்காக, லூதியானாவில், நீரஜ் குமார் (Neeraj Kumar) மற்றும் அவரது மனைவியான பர்வீன் கௌர் (Parveen Kaur) ஆகியோர் நடத்திவந்த பயண ஏஜன்சியை அவர் அணுகியுள்ளார்.
2019ஆம் ஆண்டு இந்த விடயம் நடந்துள்ளது. நீரஜ் பர்வீன் தம்பதியர், தியானிடம் 30 லட்ச ரூபாய் கேட்க, முதல் தவணையாக 7 லட்ச ரூபாயும், பின்னர் சில தவணைகளாக வங்கி மூலமாக 15 லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார் தியான்.
பணத்தை பெற்றுக்கொண்ட நீரஜ், தியான் ஜக்ரூப் தம்பதியருக்கு கனடா செல்வதற்கான விமான பயணச்சீட்டுகளைக் கொடுத்துள்ளார். ஆனாலும், திடீரென பயணச்சீட்டுகளை ரத்து செய்துள்ளார். நீரஜ் மூன்று முறை இப்படி பயணச்சீட்டுகளை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளார் தியான்.
கடைசியாக, தியானையும் அவரது மனைவியையும் டில்லிக்கு வரச்சொல்லி, அங்கிருந்து கனடாவுக்கு விமானம் ஏறலாம் என்று கூறியிருக்கிறார் நீரஜ்.
அதை நம்பி அமிர்தசரஸிலிருந்து விமானம் மூலம் டில்லி சென்ற தியான் ஜக்ரூப் தம்பதியர், 15 நாட்கள் டில்லியில் காத்திருந்து விட்டு, நீரஜ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியிருக்கிறார்கள். தங்கள் பணத்தையாவது திருப்பிக் கொடுக்குமாறு அவர்கள் நீரஜை கேட்க, 8 லட்ச ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதிப்பணத்தை கொடுக்க மறுத்துள்ளார் ஏஜண்ட் நீரஜ்.
பொலிசில் புகார்
2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 29ஆம் திகதி, தியான் ஜக்ரூப் தம்பதியர் பொலிசில் புகாரளிக்க, கடத்தல் தடுப்பு பொலிசாரிடம் புகார் சென்றுள்ளது.
தற்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, நீரஜ், பர்வீன் தம்பதியர் மீது மோசடி, குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.