தாங்கள் இளவரசர் வில்லியமுடன் பேசுகிறோம் என்பதை அறியாமலே பேசிய இந்திய தம்பதி: ஒரு சுவாரஸ்ய தகவல்
லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதி, பர்மிங்காமில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் இருக்கை முன்பதிவு செய்ய திட்டமிட்டார்கள்.
தொலைபேசியை எடுத்தது இளவரசர் வில்லியம்
லண்டனில் வாழும் வினய் (Vinay Aggarwal, 32) அங்கிதா (Ankita Gulati) தம்பதி, பர்மிங்காமிலுள்ள இந்திய உணவகம் ஒன்றிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
உணவகத்தில் இருக்கை முன்பதிவு செய்வதற்காக வினய் தொலைபேசியில் அழைக்க, மறுமுனையில் ஒருவர் அவரது அழைப்பை ஏற்று அவருக்காக இரண்டு இருக்கைகள் முன்பதிவு செய்துள்ளார்.
PA MEDIA
பின்னர் வினய், அங்கிதா தம்பதியர் உணவகத்துக்கு வர, அப்போதுதான் அவர்களுக்கு அந்த உண்மை தெரியவந்துள்ளது.
ஆம், வினயுடன் தொலைபேசியில் பேசியது இளவரசர் வில்லியம். ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்கும் வினய், அங்கிதா தம்பதியர், இளவரசர் வில்லியம் தங்களுடன் தொலைபேசியில் பேசியதை நண்பர்கள் அனைவருக்கும் சொல்லப்போகிறோம் என்கிறார்கள், இன்னமும் நடந்ததை நம்பமுடியாமல்!
PA MEDIA
நடந்தது என்ன?
மன்னருடைய முடிசூட்டுவிழாவையொட்டி, இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் நாடுமுழுவதும் மேற்கொண்டு வரும் பயணத்தின் ஒரு பகுதியாக, இருவரும் பர்மிங்காமிலுள்ள இந்திய உணவகம் ஒன்றிற்கு வருகைபுரிந்தார்கள்.
1966ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த மீனா ஷர்மா (63) குடும்பம் நடத்தும் உணவகத்துக்குத்தான் இளவரசர் வில்லியமும் கேட்டும் வந்திருந்தார்கள்.
பெண்கள் மட்டும் சமைக்கும் அந்த உணவகத்தில் ரொட்டி தயாரிக்கும் போட்டியில் இருவரும் கலந்துகொள்ள, போட்டியில் கேட் வெற்றி பெற்றதாக அறிவித்தார் மீனா ஷர்மா.
இப்படி அந்த உணவகத்தில் இருக்கும்போதுதான், வில்லியம், வினய் அழைக்கும்போது தொலைபேசியில் அவருடன் பேசி அவருக்காக இருக்கை முன்பதிவு செய்தார்.
ஒரு நல்ல மேலாளர் போல இளவரசர் வில்லியம் அந்த வேலையை திறம்பட செய்ததாக பாராட்டுகிறார் மீனா ஷர்மா.