இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுவனின் தண்டனை அதிகரிக்கப்படுமா?
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரத்தில், ஒரு 15 வயது சிறுவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மிதித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த பீம் சென் கோலி (Bhim Sen Kohli, 80) என்னும் இந்திய வம்சாவளியினரான முதியவரை, ஒரு கூட்டம் சிறுவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.
ஐந்து சிறுவர்கள் கோலியை சூழ்ந்துகொண்டு, அவரை இனரீதியாக விமர்சித்ததுடன், அவரை மிதித்துக் கீழே தள்ளி, அவரது கழுத்திலும் முதுகெலும்பிலும் மாறி மாறி மிதித்துள்ளார்கள்.
அந்த சிறுவர்கள் குற்றுயிராக கோலியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோலி, கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துவிட்டார்.
கோலி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை முன்னர் நடத்திவந்துள்ளார்.
இரண்டு பேருக்கு தண்டனை
இந்த வழக்கில் ஒரு 15 வயது சிறுவன் மற்றும் ஒரு 13 வயது சிறுமிக்கு மட்டும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அந்த 15 வயது சிறுவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு இளைஞர் மறுவாழ்வு ஆணை (youth rehabilitation order) என்னும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படி ஒரு கொடூர செயலை அந்த சிறுவன் செய்ததை அறித்த சொலிசிட்டர் ஜெனரல், அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகவே, அந்த சிறுவனின் வழக்கை மீளாய்வு செய்வதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த வழக்கை மீளாய்வு செய்து, அந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிகரிக்கப்படவேண்டுமா இல்லையா என முடிவு செய்யும்.
இதற்கிடையில், கோலியின் மகளான சூசன் கோலி. தன் தந்தையை கொடூரமாக கொன்றவர்களுக்கு எதற்காக இரக்கம் காட்டவேண்டும் என கேட்க, ஊடகங்கள் அவரை இரக்கமில்லாதவர் என விமர்சித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |