கனடாவில் சாலை விபத்தில் பலியான இந்தியக் குடும்பம்: பொலிசார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
கனடாவில், சாலை விபத்தொன்றில் மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று பலியான வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்க, வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிசார் மறுப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சாலை விபத்தில் பலியான இந்தியக் குடும்பம்
கனடாவில், ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையும் பலியானார்கள்.
தம்பதியர், தங்கள் மகன் கோகுல்நாத் (33), மருமகள் அஷ்விதா ஜவஹர் (27) மற்றும் பேரனான மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் ஆகியோரைப் பார்ப்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில் விபத்தில் பலியாக, அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
விசாரணைக்கு ஒத்துழைக்க பொலிசார் மறுப்பு
இந்த விபத்து தொடர்பான வழக்கை கனடாவின் சிறப்பு விசாரணைப்பிரிவு (Special Investigations Unit, SIU) விசாரித்துவருகிறது.
அந்த விபத்தில், உயிர் பலிகளுக்கு காரணமான குற்றவாளி மட்டுமின்றி, அவரைத் துரத்திச் சென்ற பொலிசாரும், சாலையின் தவறான திசையில்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றார்கள். உண்மையில், அது விதிமீறலாகும்.
இந்நிலையில், அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 19 பொலிசாரை சிறப்பு விசாரணைப்பிரிவு அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள்.
ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பொலிசார் தங்களுடன் பேசவோ, விபத்து சம்பந்தப்பட்ட குறிப்புகளை கையளிக்கவோ மறுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், விபத்தில் சிக்கி பலியான குழந்தையான ஆதித்யா விவானின் தாய் அஷ்விதா ஜவஹர், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, நேற்று, புதனன்று சிறப்பு விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |