வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணம்; இந்திய- இலங்கை உறவு மேம்படுமா?
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (04) இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர்.
புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
தலைமையுடனான ஜெய்சங்கரின் சந்திப்பு, இலங்கையுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.
"இந்தியாவின் அண்டை நாடுகளின் முதல் கொள்கை மற்றும் SAGAR கண்ணோட்டத்திற்கு இணங்க, பரஸ்பர நலனுக்கான நீண்டகால கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்தப் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தை இதுவாகும்.