கனடாவை நோக்கி திரும்பும் இந்திய அறிவாளிகள்... விசா கொள்கையால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு
அமெரிக்க விசா கொள்கையால் திறமை வாய்ந்த இந்தியர்கள் கனடாவை நோக்கி திரும்பியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருமளவில் வரவேற்கப்படும் திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவின் பழமையாய்ப்போன H-1B விசா கொள்கைகளால் அமெரிக்காவுக்கு செல்வதற்கு பதிலாக பெருமளவில் கனடாவை நோக்கி திரும்பி வருவதாக புலம்பெயர்தல் மற்றும் கொள்கை நிபுணர்கள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆண்டொன்றிற்கு 1,00,000 H-1B விசாக்களை நிராகரித்து வரும் அமெரிக்கா, பல மில்லியன் திறமை படைத்த, அதி திறன் வாய்ந்த மற்றும் அமெரிக்காவில் கல்வி கற்ற இந்தியர்களை புறக்கணித்துள்ளது என்று கூறியுள்ளார்கள் புலம்பெயர்தல் மற்றும் கொள்கை நிபுணர்கள்.
அதே நேரத்தில், கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளோ அமெரிக்க கொள்கைகளை விட திறமை படைத்தோரை நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் சிறந்தவையாக உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்படும் காலத்துக்கு முன்பு உருவாக்கப்பட்ட கொள்கைகளையே அமெரிக்கா கட்டிக்கொண்டு அழும் நிலையில், உலகமே மாறியபின்னும் அமெரிக்காவின் கொள்கைகளோ மாறவேயில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆகவே, திறமை படைத்த இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு பதிலாக கனடா நோக்கி படையெடுப்பதைத் தவிர்க்க, உடனடியாக அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர்.