இந்திய பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தானில் படுகொலை!
பிரபல ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார்.
டெல்லியில் வசிக்கும் டேனிஷ் சித்திகி, ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமையில் செய்திகளை சேகரிக்க சென்றார். காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் பகுதியில் டேனிஷ் சித்திகி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டேனிஷ் சித்திகி வியாழக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகளுக்கும் தலிபான் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையிலான மோதலின் போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்றதிலிருந்து, கடுமையான வன்முறைகள் நடந்து வருகின்றன. படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட, டேனிஷ் தலிபான்கள் நடத்தும் தாக்குதல்கள் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
டெல்லி கலவரத்தில் துப்பாக்கியை ஏந்தியவரின் புகைப்படம், கொரோனா பொதுமுடக்கதில் புலம்பெயர்ந்தவர்களின் துயரம், டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களை மைதானத்தில் எரித்தது என சமீபத்தில் அனைவராலும் பகிரப்பட்ட உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பல புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் தான் டேனிஷ் சித்திகி.
டேனிஷ் சித்திகி ஒரு தொலைக்காட்சி நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஒரு புகைப்பட பத்திரிகையாளரானார்.
டேனிஷ் 2018-ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசு பெற்றார். ரோஹிங்கியா அகதிகள் நெரிக்கடி தொடர்பான புகைப்படங்களுக்காக, டேனிஷ் புலிட்சர் விருது பெற்றார்.