கடைசி 11 பந்தில் 6 சிக்ஸர் விரட்டிய யுவராஜ்! இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா: மேற்கிந்திய தீவு போராடி தோல்வி
மூத்த வீரர்கள் கலந்து கொள்ளும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், சச்சினின் இந்திய லெஜண்ட்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலகின் முன்னணி வீரர்களான ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொள்ளும், Road Safety World Series டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம், அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு போன்ற அணிகள் கலந்து கொண்டன.
அதன் படி இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ,மேற்கிந்திய தீவு லெஜண்ட்ஸ் அணியும், இந்திய லெஜண்ட்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான சேவாக் மற்றும் சச்சின் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.
சேவாக, 17 பந்தில் 35 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, சச்சின் ஒரு புறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார், இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மொகமது கைப் 27 ஓட்டங்களிலும், சச்சின் அதன் பின் 65 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் கடைசி கட்டத்தில் இறங்கிய யுவராஜ் சிங், தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 20 பந்தில் 49* ஓட்டங்கள் குவித்த யுவராஜ் சிங், தான் சந்தித்த கடைசி 11 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
இதனால் இறுதியாக இந்திய லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் எடுத்தது.
219 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு லெஜண்ட்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக, டேவைன் ஸ்மித்-வில்லியம் பெர்கின்ஸ் களமிறங்கினர்.
இதில் வில்லியம் பெர்கின்ஸ் 9 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த நார்சிங் டியோனரைன், டேவைன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்கள் இரண்டு பேரும் இந்திய லெஜண்ட்ஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்க, அணியின் எண்ணிக்கை எகிறியது.
சிறப்பாக விளையாடி வந்த டேவைன் ஸ்மித் 63 ஓட்டங்கள் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிரிக் எட்வர்ஸ் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேற, பிரைன் லாரா வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு புறம் பிரைன் லாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறு சிறப்பாக விளையாடி வந்த நார்சிங் டியோனரைன் 59 ஓட்டங்களில் எதிர்பாரத ரன் அவுட் ஆகினார்.
இருப்பினும் லாரா தனி ஒருவனாக போராடி கடைசி கட்டத்தில் மேற்கிந்திய தீவு அணியால் 20 ஓவரில் 206 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
கடைசி வரை போராடி வந்த லாரா 28 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய லெஜண்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறவிருக்கு மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், இலங்கை லெஜண்ட்ஸ் அணியும், தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.




