இந்திய நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் புகை குண்டு வீச்சு: மக்களவையில் அத்துமீறல்
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த நபர்கள் புகை குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எம்.பி.கள் அஞ்சலி
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22ம் ஆண்டு நினைவு நாளான இன்று, தொடர்புடைய தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.பி.கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மக்களவையில், பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளம் பெண் திடீரென அவைக்குள் குதித்துள்ளனர்.
அவர்கள் கையில் மஞ்சள் நிறத்தில் புகையை உமிழக்கூடிய பொருளை வைத்திருந்துள்ளனர். மேலும் சர்வாதிகாரத்திற்கு இங்கு இடமில்லை என்றும் முழக்கமிட்டுள்ளனர். அந்த மஞ்சள் நிற புகை மொத்தமாக அவை முழுவதும் பரவியது.
பாதுகாப்பு குறைப்பாடு
இந்த சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர்புடைய சம்பவமானது மொத்தமாக பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக நடந்துள்ளது என்று உறுப்பினர்கள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சமீபத்தில் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் சிறப்பம்சமே பாதுகாப்புதான் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இப்படியான பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் நடந்திருப்பது அவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |