இந்தியர் ஒருவருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை: பின்னணி
Migrant jailed for murdering woman in brutal revenge attack: சீனப்பெண்ணொருவரை கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில், சீனப்பெண்ணொருவரை கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
மாணவர் விசாவில் பிரித்தானியா சென்ற இந்தியர் தீபக் சந்து (24), ஸியாவோகிங் கே (Xiaoqing Ke, 39) என்னும் சீனப்பெண்ணை சந்தித்துள்ளார்.

இருவரும் பழகத் துவங்கிய நிலையில், கேயின் கைப்பையிலிருந்து 500 பவுண்டுகளை திருடியுள்ளார் சந்து.
அதோடு மட்டுமின்றி, தான் ஒரு மொடல் என்றும், நடிகர் என்றும், சௌதாம்ப்டன் பல்கலையில் பட்டம் பெற இருப்பதாகவும், தன் சகோதரியுடன் தான் சௌதாம்ப்டனில் தங்கியிருப்பதாகவும் கேயிடம் கூறியிருக்கிறார்.
விடயம் என்னவென்றால், இதில் எதுவுமே உண்மையில்லை. அவர் பல்கலையில் சேர்ந்து ஒழுங்காக வகுப்புகளுக்குச் செல்லாததால் படிப்பை ஆறே மாதங்களில் நிறுத்தியுள்ளார்.
சந்து சொல்வது அவ்வளவும் பொய் என்பதைத் தெரிந்துகொண்ட கே, அவருடனான உறவுகளை முறித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

அத்துடன், தன்னிடம் திருடிய பணத்தையும் கே திருப்பிக் கேட்க, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி, கத்தி ஒன்றை வாங்கிக்கொண்டு கே தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றுள்ளார் சந்து.
ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் சந்து அங்கிருந்து வெளியேறிய நிலையில், இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.
கே, கழுத்தில் கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது தெரியவர, பொலிசார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.
சந்து, கே வீட்டுக்கு கத்தியுடன் வந்த விடயம் உட்பட பல தகவல்களை சேகரித்த பொலிசார் சந்துவைத் தேட, 12ஆம் திகதி, இந்தியா செல்வதற்காக விமானம் ஏறச் சென்ற அவரை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
கடைசிவரை தான் கேயை கொல்லவேயில்லை என சந்து மறுத்த நிலையிலும், ஆதாரங்களின் அடிப்படையில், அவர் கேயை கொலை செய்ததாக அவருக்கு, குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறையிலிருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.