அவளை நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பிவிட்டேன்: மனைவியைக் கொன்றுவிட்டு தாயிடம் கூறிய இந்தியர்
கனடாவில், தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு, தன் தாயை தொலைபேசியில் அழைத்து, அவளை நான் நிரந்தரத் தூக்கத்துக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறிய இந்தியர் தொடர்பிலான புகைப்படங்கள் முதலான சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவுக்குச் சென்றேயாகவேண்டுமென ஒற்றைக்காலில் நின்ற நபர்
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த ராஜு என்னும் ஜக்பிரீத் சிங் (Jagpreet Singh, 50), கனடாவுக்குச் செல்வதை கனவாகக் கொண்டிருந்திருக்கிறார். ஆகவே, சீக்கிரமாக தன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் கனடாவுக்குச் சென்ற தன் மனைவியான பல்வீந்தர் கௌர்க்கு (Balwinder Kaur, 41) அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
இந்த தகவலை, பல்வீந்தர் கௌரின் சகோதரியாகிய ரஜ்வீந்தர் கௌர் (Rajwinder Kaur) வெளியிட்டுள்ளார்.
ஒரே வாரம்
மார்ச் மாதம் ஜக்பிரீத் சிங் கனடாவை வந்தடைந்த நிலையில், ஒரே வாரத்துக்குப் பின், கடந்த வாரம், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி, தன் மனைவியாகிய பல்வீந்தர் கௌரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டார் அவர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பல்வீந்தர் கௌரின் சகோதரியாகிய ரஜ்வீந்தர் கௌர், பல்வீந்தர் கௌரைக் கத்தியால் குத்திவிட்டு, அவரது கணவரான ஜக்பிரீத் சிங் இந்தியாவிலிருக்கும் தன் தாயை வீடியோ காலில் அழைத்து, தன் மனைவி இரத்த வெள்ளத்தில் அசைவில்லாமல் கிடப்பதைக் காட்டி, அவளை நான் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறியதாகவும், அதைக்கண்ட அவரது தாய் முதலானோர் அதிர்ச்சியில் அலறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மகளுக்காக கனடா சென்ற பல்வீந்தர் கௌர்
உண்மையில், ஜக்பிரீத் சிங், பல்வீந்தர் கௌர் தம்பதியருக்கு ஹர்னூர்பிரீத் கௌர் (Harnoorpreet Kaur, 22) என்னும் மகளும், குர்நூர் சிங் (Gurnoor Singh, 18) என்னும் மகனும் இருக்கிறார்கள்.
கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற ஹர்னூர்பிரீத் கௌருக்கு திடீரென உடல் நலமில்லாமல் போகவே, தன் மகளைக் கவனித்துக்கொள்வதற்காக பல்வீந்தர் கௌர் கனடா சென்றுள்ளார்.
மகளுடைய மருத்துவ செலவுகளுக்காகவும், வீட்டுக்கு பணம் அனுப்புவதற்காகவும் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார் பல்வீந்தர் கௌர்.
அப்படி அவர் கஷ்டப்பட்டு வேலை செய்து, வீட்டுக்கு பணம் அனுப்ப, தன் வேலையை விட்டுவிட்டு மனைவி பணத்தில் சாப்பிட்டுவந்த ஜக்பிரீத் சிங், தன் மனைவியை வற்புறுத்தி விசா பெற்று கனடாவுக்குச் சென்று, மனைவியைக் கொலை செய்துள்ளார். கனடாவில் கைது செய்யப்பட்ட ஜக்பிரீத் சிங்கிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
அவர் எதற்காக மனைவியைக் கொலை செய்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. பல்வீந்தர் கௌரை இழந்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.