18 முறை கத்தி குத்து! மனைவியை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை.. பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரிட்டனில் மனைவியை கொலை செய்த வழக்கில் இந்தியாவை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஷரி மாகாணத்தில் வசித்து வருபவர் அனில் கில்(47). இவரது மனைவி ரஞ்சித் கில்(43). இந்தியாவை இருப்பிடமாய் கொண்ட இவர்கள் திருமணத்திற்கு பிறகு பிரிட்டனில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு மது மற்றும் போதை பழக்கம் இருந்துள்ளது.
இதற்கிடையில் மனைவி ரஞ்சித் கில் வேறொரு ஆண் நபருடன் தொடர்பில் இருப்பது அனிலுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஒன்றாக அமர்ந்து மது குடித்தும் போதை பொருளை பயன்படுத்தியுள்ளனர்.
அப்போது அனில் தனது மனைவியிடம் ஆண் நபருடன் உள்ள தொடர்பு பற்றி கேட்டதால் இருவருக்குள் சண்டை வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அனில் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு அவரது மனைவி ரஞ்சித் கில்லை 18 முறை குத்தியுள்ளார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ரஞ்சித் கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து அனில் கில் வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி ரஞ்சித்தை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அனில் கில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அது மட்டும் இல்லாமல் 22 ஆண்டுகளுக்கு பின்னரே குற்றவாளி பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.