கனடா எல்லையில் மரணமடைந்த இந்திய புலம்பெயர்ந்த குடும்பம்: இதுவரை வெளிவராத புதிய தகவல்
கனடா அமெரிக்க எல்லையில் உடல் உறைந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
மனிடோபா வரையில் சென்று சேர்ந்தனர் என்பதில் இன்னமும் விசாரணை அதிகாரிகளுக்கு மர்மம் நீடிக்கிறது
கனடா- அமெரிக்க எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த இந்திய புலம்பெயர்ந்த குடும்பம் தொடர்பில் இதுவரை வெளிவராத புதிய தகவல்களை கனேடிய பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் குஜராத் மாகாணத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ்(35), இவரது மனைவி வைஷாலி (33), இவர்களின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் உடல் உறைந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
குறித்த விடயம் கனடா மட்டுமின்றி, இந்திய மாகாணமான குஜராத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது தொடர்புடைய குடும்பம் எவ்வாறு மனிடோபா வரையில் சென்று சேர்ந்தனர் என்பதில் இன்னமும் விசாரணை அதிகாரிகளுக்கு மர்மம் நீடிக்கிறது.
ஜனவரி 12ம் திகதி ஜகதீஷ் குடும்பம் துபாய் மாகாணத்தில் இருந்து விமானம் மூலமாக ரொறன்ரோவுக்கு வந்து சேர்ந்துள்ளனர் என்பது பொலிசார் உறுதி செய்துள்ளனர். அங்கிருந்து தனியார் வாகனம் ஒன்று இவர்களை அழைத்துச் சென்றுள்ளது.
மட்டுமின்றி ரொறன்ரோவில் இந்த குடும்பம் பல பகுதிகளில் தங்கியுள்ளது. ஆனால் அதன் பின்னர், ஜனவரி 15 முதல் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்த தரவுகளும் இதுவரை பொலிசார் வசம் சிக்கவில்லை, மர்மமாகவே உள்ளது.
credit: THE CANADIAN PRESS
இந்த நிலையில், ஜனவரி 19ம் திகதி கனடா எல்லையில் இந்த குடும்பம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில் சேவை மற்றும் பேருந்து ஆவணங்கள் அனைத்தும் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தியும், இவர்கள் இந்த நாட்களில் என்ன ஆனார்கள் என்பது கனேடிய பொலிசாருக்கு மர்மமாகவே உள்ளது.
ரொறன்ரோவில் இருந்து, ஜகதீஷ் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட எமர்சன் பகுதி வரையில் சுமார் 2,000 கி.மீற்றர்கள் பயணப்பட்டுள்ளனர். கண்டிப்பாக பல பேர்கள் இந்த குடும்பத்தினரை சந்தித்திருப்பார்கள், அவர்களில் பலரும் இவர்களுக்கு உதவி இருப்பார்கள் என நம்புவதாகவே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த குடும்பத்தினருக்கு உதவியுள்ள மக்கள், கண்டிப்பாக முன்வந்து தங்கள் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் என தற்போது அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்த குடும்பம், நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளது. மக்கள் முன்வந்து தகவல் அளித்தால் இந்த வழக்கில் உதவியாக இருக்கும் எனவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.