அவுஸ்திரேலியாவில் பிரித்தானியர்களை முந்தி முதலிடம் பிடித்த இந்திய புலம்பெயர்ந்தோர்
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கையை விட இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பிரித்தானியர்களை முந்திய இந்தியர்கள்
ஆஸ்திரேலியப் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, அவுஸ்திரேலியாவில், கல்வி மற்றும் வேலைக்காக 9,71,020 இந்திய புலம் பெயர்ந்தோர் வசித்து வருகின்றனர்.

இது அவுஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில், 5.2 சதவீதம் ஆகும்.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரித்தானிய புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை இந்தியர்கள் முந்திவிட்டனர்.
அவுஸ்திரேலியாவில், வசித்து வரும் 9,70,950 பிரித்தானிய புலம் பெயர்ந்தோர் உள்ளனர். 2013 ஆம் ஆண்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ள புலம் பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, சீனாவில் பிறந்தவர்கள் 732,000 பேரும், நியூசிலாந்தில் பிறந்தவர்கள் 638,000 பேரும் உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் 29.5 சதவீதமாக இருந்த வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேவேளையில், இதன் காரணமாக இதுவரை இல்லாத வகையில் வீடுகளுக்கு பற்றாக்குறை அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அவுஸ்திரேலியாவில் இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவதை கண்டித்து சுமார் 10,000 பேர் பேரணி நடத்தினர்.
இந்த போராட்டத்தை கண்டித்த அவுஸ்திரேலிய அரசு, "இனவெறி மற்றும் தங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமே என்ற எண்ணத்தில் வெடித்துள்ள இந்த போராட்டத்திற்கு நவீன அவுஸ்திரேலியாவில் இடம் இல்லை. பல்வேறு கலாச்சாரம் நமது தேசிய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் மதிப்பு மிக்க பகுதி ஆகும்." என தெரிவித்தது.