கனடா எல்லையில் இந்தியர்கள் பலியான சம்பவம்... தப்பியவர்களின் நிலை என்ன தெரியுமா?
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற இந்தியர்களில் ஒரு குடும்பமே குளிரில் உறைந்து பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர்களுடன் கூட அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற மற்றவர்களின் நிலை குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்றின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான லக்ஷ்மி ஸ்ரீதரன் உட்பட சிலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கடந்த மாதம் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின் போது, நான்கு இந்தியர்கள் பலியாக, இருவர் பனியால் frostbite என்ற பிரச்சினைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு பெண், தன் கையின் ஒரு பகுதியை இழக்க நேரிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதில், கனடா அமெரிக்க எல்லையைக் கடந்து ஒரு ஏழு பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் அமெரிக்க எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த செய்தி அந்த ஏழு பேரைக் குறித்தது எனலாம்...
அதாவது, அவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கவும் பட்டுவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு பிரச்சினை இனிதான் ஆரம்பம் என்கிறார் La Resistencia என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்திவரும் Maru Mora Villalpando.
இப்படி நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள், இனி தங்கள் செலவுகளை தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும்.
நீங்கள் வைத்திருக்கும் பணத்தை வைத்துத்தான் உங்கள் செலவுகளை நீங்கள் கவனித்துக்கொள்ளவேண்டும், அதுவும், நீங்கள் அமெரிக்காவுக்குள் நுழையும்போது யாராவது உங்கள் பணத்தைக் கொள்ளையிடாமல் இருந்திருந்தால்... பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணியான Victoria Carmona.
சட்டவிரோதமாக புலம்பெயர்வோருக்கு அரசு உதவிகள் கிடைப்பது கடினம் என்பதால், மருத்துவ சிகிச்சை பெறுவதில் கூட சிக்கல் ஏற்படும் என்கிறார் அவர்.
புலம்பெயர்வோருக்கு உதவுவதற்கான அமைப்புகள் கூட, தங்களிடம் போதுமான நிதி இல்லாததால், இப்படி புலம்பெயர்ந்து வருவோர் தங்கள் உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்தால், அவர்களைச் சார்ந்துதான் இருக்கவேண்டிவரும் என்கிறார், South Asian Americans Leading Together என்னும் அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான லக்ஷ்மி ஸ்ரீதரன்.
இப்படி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவோருக்கு பொதுவாக யாரும் உதவிக்கு வரவும்மாட்டார்கள் என்கிறார் அவர்.
ஆக, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த ஏழு இந்தியர்களும், இப்போது சிறையில் இல்லை என்றாலும், அவர்களது பிரச்சினை தீரவில்லை என்கிறார் Mora Villalpando.
என்னைப் பொருத்தவரை, அவர்கள் கணுக்காலில் மின்னணு ட்ராக்கிங் அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டோ அல்லது மொபைல் ஆப் ஒன்றின் மூலமாகவோ கண்காணிக்கப்படுவார்கள் என்கிறார் அவர். அதனால், அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதும் கடினம்.
பொதுவாகவே, இந்தியாவிலிருந்து வருவோர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட நீண்டகாலம் காத்திருக்கவேண்டும் என்று கூறும் லக்ஷ்மி ஸ்ரீதரன், அவர்கள் சொந்த நாட்டில் அரசியல் ரீதியாகவோ, அல்லது எவ்வகையிலானாலும் துன்புறுத்தப்பட்டாலும் கூட, அமெரிக்காவைப் பொருத்தவரை அவர்கள் புகலிடம் பெற போராட வேண்டியிருக்கும் என்கிறார்.
எந்த நேரத்திலும் அவர்கள் நாடு கடத்தப்படுவது முதல் பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்கள் புகலிடம் கோரினாலும் உடனே பதில் கிடைக்குமா என்றும் கூறமுடியாது. எனது அனுபவத்தில் 12 ஆண்டுகள் வரை புகலிடம் மறுக்கப்பட்டவர்களைக் கூட சந்தித்திருக்கிறேன் என்கிறார் Victoria Carmona.
ஆக, உயிர் பிழைத்து கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்து, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாலும், அவர்களுக்கு பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்கிறார்கள் இவர்கள்!