23 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை.. 39 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய வீராங்கனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜ் தனது 39வது வயதில் ஓய்வு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனுடன் 'பல ஆண்டுகளாக நீங்கள் அளிக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி! உங்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் எனது இரண்டாவது இன்னிங்சை எதிர்பார்க்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'இந்திய அணியின் நீல நிற உடையை அணிந்து, உங்கள் நாட்டின் மிக உயர்ந்த கவுரவத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு சிறுமியாக புறப்பட்டேன். இந்த பயணத்தில் நான் அதிகப்படியான ஏற்றங்களையும், சில இறக்கங்களையும் சந்தித்தேன். ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தனித்துவமான ஒன்றை கற்றுக் கொடுத்தது.
கடந்த 23 ஆண்டுகள் என் வாழ்க்கையில் மிகவும் நிறைவான, சவாலான மற்றும் மகிழ்ச்சியானதாக இருந்தது. எல்லா பயணங்களை போலவே இதுவும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் நான் ஓய்வு பெறும் நாள் இன்று.
Thank you for all your love & support over the years!
— Mithali Raj (@M_Raj03) June 8, 2022
I look forward to my 2nd innings with your blessing and support. pic.twitter.com/OkPUICcU4u
ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னால் முடிந்ததைச் செய்தேன். மூவர்ணக் கொடியை பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் எப்போதும் மதிக்கிறேன்.
சில திறமையான இளம் வீராங்கனைகளின் திறமையான கைகளில் அணி இருப்பதால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். எனவே, எனது விளையாட்டு வாழ்க்கைக்கு திரைச்சீலை அமைக்க இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன்.
முதலில் ஒரு வீராங்கனையாகவும், பின்னர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும், பிசிசிஐ மற்றும் ஸ்ரீ ஜெய் ஷா சர் (கௌரவச் செயலாளர், பிசிசிஐ) அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகள் அணியை வழிநடத்தியது பெருமையாக இருந்தது.
Photo Credit: ANI
இது நிச்சயமாக என்னை ஒரு நபராக வடிவமைத்தது மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை வடிவமைக்க உதவியது. இந்தப் பயணம் முடிந்திருக்கலாம், ஆனால் நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடவும், இந்தியாவிலும் உலகெங்கிலும் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் விரும்புகிறேன். எனது ரசிகர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி' என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1999ஆம் ஆண்டு தனது 16வது வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கிய மித்தாலி ராஜ், 23 ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளார். மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர் என்று அழைக்கப்படும் மித்தாலி ராஜ், தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி மிரட்டியவர்.
Photo Credit: ICC Cricket
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பெருமைக்குரிய இவர், 6 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர். மித்தாலி ராஜ் 2003ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2015ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றவர்.
சிறந்த வீராங்கனையாகவும், சிறந்த கேப்டனாகவும் விளங்கிய மித்தாலி ராஜ், இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7805 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 7 சதம், 64 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 125 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
89 டி20 போட்டிகளில் 17 அரைசதங்களுடன் 2364 ஓட்டங்கள் எடுத்துள்ள மித்தாலி ராஜ், 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் (214) அடங்கும்.