அசுர வேகத்தில் பாய்ந்த கார்... நொடிப்பொழுதில் நடந்த துயரம்: அனாதையான தமிழ் சிறுவன்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மிக மோசமான சாலை விபத்து ஒன்றில் சிக்கி தமிழர்களான ஒரே குடும்பத்து மூவர் பலியான சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எஞ்சியுள்ள ஒரே ஒருவர்
குறித்த விபத்தானது தற்போது 14 வயது சிறுவனை அனாதையாக்கியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் வசித்துவந்த 45 வயது அரவிந்த் மணி, அவரது மனைவி பிரதீபா அரவிந்த், 40, மற்றும் இவர்களது 17 வயது மகள் ஆண்ட்ரில் அரவிந்த் ஆகிய மூவருமே புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 5.45 மணியளவில் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
சம்பவத்தின் போது உடன் பயணிக்காத 14 வயது Adiryan என்பவர் அந்த குடும்பத்தில் எஞ்சியுள்ள ஒரே ஒருவர். இந்த நிலையில் அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடன் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா தம்பதியின் கார் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கியுள்ளது.
சமீபத்தில்தான் பாடசாலை கல்வியை முடித்து டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் சேர முடிவு செய்து, கல்லூரிக்கு தமது பெற்றோருடன் புறப்பட்டுள்ளார் ஆண்ட்ரில் அரவிந்த்.
மணிக்கு 160 கி.மீ வேகத்தில்
இந்த விபத்தில் மொத்தம் ஐவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு உள்ளிட்டவையை ஆய்வு செய்தால், இப்படியான ஒரு மோசமான சாலை விபத்தை கடந்த 26 ஆண்டுகளில் தாம் பார்த்ததில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய வாகனமானது கண்டிப்பாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறந்திருக்க வேண்டும் என்றும் அதனாலையே மோதிய வேகத்தில் நெருப்பு கோளமாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விபத்தை நேரில் பார்த்த சாரதி ஒருவரும் அந்த வாகனத்தின் வேகத்தை உறுதி செய்துள்ளார். பிரதீபா அரவிந்த் தமிழகத்தின் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |