பதவியிழக்கும் அபாயத்தில் இந்திய வம்சாவளி உள்துறைச் செயலர்: இன்று முடிவு செய்கிறார் பிரித்தானிய பிரதமர்
இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் பதவியிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
அதிகார துஷ்பிரயோகம்
தற்போதைய பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், முன்பு அட்டர்னி ஜெனரலாக இருக்கும்போது, கடந்த கோடையில், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணித்தபோது பொலிசார் அவரைப் பிடித்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோர், குறிப்பாக அதிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தில் அபராத புள்ளிகளும் பதிவு செய்யப்படும். மூன்று ஆண்டுகளில் 12 அல்லது அதற்கு அதிகமான அபராத புள்ளிகளைப் பெறுவோர், வாகனம் ஓட்டும் தகுதியை இழப்பார்கள்.
Image: Phil Harris
சில சூழல்களில், அவர்கள் வாகன ஓட்டுதல் விழிப்புணர்வு வகுப்பு ஒன்றில் பங்கேற்க அறிவுறுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், விதிமீறலில் ஈடுபட்டு சிக்கிய சுவெல்லா, அதிகாரிகளிடம் தனக்கு தனிப்பட்ட சலுகைகள் அளிக்குமாறு கேட்டுள்ளார். அபராதம் செலுத்தி, அபராத புள்ளிகள் பெறுவது தனது ஓட்டுநர் உரிமத்தை பாதிக்கலாம் என்பதால், அதற்கு பதிலாக தனக்கு விழிப்புணர்வு வகுப்பு ஒன்றில் பங்கேற்க வழி செய்து தருமாறு கேட்டுள்ளார் அவர்.
Image: Tom Nicholson/REX/Shutterstock
ஆனால், அந்த வகுப்புகளிலும் மற்றவர்களுடன் இணைந்து பங்கேற்காமல், தனக்கு மட்டும் தனியாக வகுப்பு நடத்தமுடியுமா என்றும் கேட்டுள்ளார் சுவெல்லா.
பதவியிழக்கும் அபாயம்
இப்படி விதிமீறலில் ஈடுபட்டதுடன், அதிலிருந்து தப்பவும் சுவெல்லா முயற்சித்த விடயம், இப்போது நாடாளுமன்றத்தை கலகலக்கச் செய்துள்ளது.
பிரதமர் ரிஷி, இந்த பிரச்சினை தொடர்பாக தனது அரசியல் ஆலோசகரான Sir Laurie Magnusஐக் கலந்தாலோசிக்க இருக்கிறார்.
இந்நிலையில், சுவெல்லா மீது விசாரணை கோரியவர்களில் ஒருவரான லேபர் கட்சித் தலைவர் Keir Starmer, சுவெல்லா விதி மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் பதவி விலகவேண்டும் என கோரியுள்ளார்.
ஆக, சுவெல்லா பிரேவர்மேன் பதவியிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.