கனடாவில் பட்டப்பகலில் இந்திய வம்சாவளி நபர் சுட்டுக்கொலை... பொலிஸார் வெளியிட்ட தகவல்
கனடாவில் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் உள்ள பிராம்ப்டனில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், பொலிசார் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
திட்டமிட்ட தாக்குதல்
ரொறன்ரோவில் உள்ள பரபரப்பான வணிக வளாகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்திலேயே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் எட்டோபிகோக்கில் உள்ள வூட்பைன் வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ளூர் நேரப்படி 3.31 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் 37 வயதான சந்தன் குமார் ராஜா குற்றுயிராக மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில், முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதல் என்றே குறிப்பிட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சந்தன் குமாரை மீட்டுள்ளனர்.
மட்டுமின்றி, சந்தனின் வெள்ளை நிற SUV காரில் குண்டு துளைகள் மற்றும் கண்ணாடி நொறுங்கிய நிலையிலும் இருந்தன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும், இன்னும் சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடுபாடு கொண்டவராக
இந்திய மாகாணம், கர்நாடகாவின் தியமகொண்ட்லு கிராமத்தை சேர்ந்த சந்தன், சிறந்த வாய்ப்புகளைத் தேடி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்.
கனடாவில், ஒரு நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சந்தன், ஐடி நிபுணராகப் பணியாற்றி வந்துள்ளார்.
மட்டுமின்றி, உள்ளூரில் கன்னட சமூகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார்.
சந்தனின் படுகொலையில் பின்னணி குறித்து ரொறன்ரோ பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |