விபத்தை ஏற்படுத்தி 4 காவலர்களை கொன்ற இந்திய வம்சாவளி சாரதி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
அவுஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தின் மீது லொறியை மோதவிட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் இந்திய வம்சாவளி சாரதிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லொறி சாரதியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதான மொஹிந்தர் சிங்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் உள்ள பிரதான சாலையில் மொஹிந்தர் சிங், தனது லொறியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் போதையிலும், தூக்க கலக்கத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிரதானசாலையில் உள்ள அவசர வழி பாதைக்கு லொறியை திருப்பி தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் அங்கு வாகன சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது லொறியை மோதியுள்ளார்.
இந்த கோர சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். இதையடுத்து மொஹிந்தர் சிங்கை பொலிசார் கைது செய்தனர்.
அவர் கைதாகும் போது, தொடர்ந்து 72 மணி நேரம் பணியாற்றி இருந்ததாகவும், அதில் வெறும் 5 மணி நேரம் மட்டுமே அவர் ஓய்வெடுத்துக் கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொஹிந்தர் சிங் மீதான வழக்கு விசாரணை விக்டோரியா மாகாண உச்சநீதிமன்றத்தில் சுமார் ஓராண்டாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. இதில் மொஹிந்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மொஹிந்தர் சிங்குக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் 18 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் அவருக்கு பிணை கோர முடியாது எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.