தமிழ்நாடு வீரர்களுள் மிகச்சிறந்தவர் அவர்தான்! அஸ்வினை புகழ்ந்து தள்ளும் வீரர்கள்
ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
சாதனை அஸ்வின்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தவர் ஆவார்.
குறிப்பாக, டெஸ்ட் வரலாற்றில் இந்தியா சார்பில் கும்ப்ளேவுக்கு (619) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அஸ்வின் (537) வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரிஸ்பேனில் 3வது டெஸ்ட் நடந்துகொண்டிருந்தபோதே, அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புகழ்ந்து தள்ளும் வீரர்கள்
அஸ்வினின் ஓய்வைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக், ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், "சிறந்த விளையாட்டை சிறப்பாக விளையாடினீர்கள். உங்களுடன் விளையாடியதில் பெருமையடைகிறேன். நிச்சயமாக தமிழ்நாடு வீரர்களுள் மிகச் சிறந்தவர் நீங்கள்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், "கிரிக்கெட் பந்தை வைத்து நீங்கள் செய்யும் அற்புதங்களும், தெளிவான சிந்தனையும், டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபரீத அன்பையும் என்றும் எங்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கும். நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும், பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள். Take a bow, அஸ்வின் ப்ரோ" என்றார்.
பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தனது பதிவில், "ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |