ட்ரம்பின் 30 நாட்கள் ஈரானிய எண்ணெய் விலக்கு... முண்டியடிக்கும் இந்திய நிறுவனங்கள்
ஈரான் எண்ணெய் மீதான ஏற்றுமதித் தடைகளை அமெரிக்கா 30 நாட்களுக்கு விலக்கியுள்ள நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று இந்திய நிறுவனங்கள்
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுக்கும் போரினால் ஏற்படும் எரிசக்தி நெருக்கடியைத் தணிக்க ட்ரம்ப் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், மூன்று இந்திய சுத்திகரிப்பு நிறுவன வட்டாரங்கள், தாங்கள் ஈரானிய எண்ணெயை வாங்கப்போவதாகவும், இதற்கான அரசாங்க வழிகாட்டுதல்களையும், பணம் செலுத்தும் விதிமுறைகள் போன்ற விவரங்கள் குறித்த அமெரிக்காவின் விளக்கத்தையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்தன.
மற்ற பெரிய ஆசிய எண்ணெய் இறக்குமதி நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவான கச்சா எண்ணெய் கையிருப்பைக் கொண்டுள்ள இந்திய சுத்திகரிப்பாளர்கள், சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் தொடர்பில் தற்காலிகமாகத் தடைகளை நீக்கியதை அடுத்து, அங்கே முன்பதிவு செய்ய விரைந்தனர்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த பலரும், பிற ஆசிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை வாங்க முடியுமா என்பதை அறிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
கடலில் ஏற்கனவே பயணித்துக்கொண்டிருக்கும் ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கு, ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமையன்று 30 நாட்கள் தடைக் காலவிலக்கை வழங்கியது.
மார்ச் 20 அன்று அல்லது அதற்கு முன்னதாக, தடை விதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்கள் உட்பட எந்தவொரு கப்பலிலும் ஏற்றப்பட்டு, ஏப்ரல் 19-க்குள் இறக்கப்படும் எண்ணெய்க்கு இந்த விலக்கு பொருந்தும்.
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக விலக்கிக்கொள்வது இது மூன்றாவது முறையாகும்.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், சுமார் 170 மில்லியன் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெய் கடலில் உள்ளது. மத்திய கிழக்கு வளைகுடா முதல் சீனாவுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகள் வரை இந்தக் கப்பல்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதன்மையான வாடிக்கையாளராக
மார்ச் 19 ஆம் திகதி வெளியான தகவலின் அடிப்படையில், சுமார் 130 மில்லியன் முதல் 140 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான ஈரானிய எண்ணெய் கடலில் மிதப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது, மத்திய கிழக்கின் தற்போதைய உற்பத்தி இழப்புகளில் 14 நாட்களுக்கும் குறைவான கால அளவிற்கே சமமானதாகும்.
ஆசிய நாடுகள் தங்களது கச்சா எண்ணெய் தேவையில் 60 சதவீதமளவிற்கு மத்திய கிழக்கைச் சார்ந்துள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் காரணமாக, 2018-ஆம் ஆண்டில் ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் மீது மீண்டும் தடைகளை விதித்தது.
இதன் பின்னர் சீனாவின் சுயாதீன சுத்திகரிப்பாளர்கள் நாளொன்றுக்கு 1.38 மில்லியன் பீப்பாய்களைக் கொள்முதல் செய்து வருவதன் மூலம், சீனா ஈரானின் முதன்மையான வாடிக்கையாளராக மாறியுள்ளது.

ஆனால் தற்போது ஈரானிய எண்ணெயை வாங்குவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களில், அதற்கான பணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையும், அதன் பெரும்பகுதி பழமையான எண்ணெய் கப்பல்களில் இருப்பதும் சிக்கலை அதிகரித்துள்ளது.
மீண்டும் தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, ஈரானிய கச்சா எண்ணெயின் முக்கிய வாடிக்கையாளர்களில் சீனாவைத் தவிர்த்து, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தைவான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அடங்கியிருந்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |