ஜேர்மனியில் கொல்லப்பட்ட இந்தியர்: நீடிக்கும் மர்மம்
ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது குறித்த விடயம் மர்மமாகவே நீடிக்கின்றது.
ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவரை மர்ம நபர்கள் மூன்று பேர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர்.
ஜேர்மனியில் கொல்லப்பட்ட இந்தியர்
ஹரியானாவைச் சேர்ந்த விஷு ஷர்மா (25), ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
செவ்வாயன்று, அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்த மூன்று பேர், விஷுவை வெளியே வரச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் வெளியே வந்ததும், அவர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்கள். விஷு படுகாயமடைந்த நிலையில், அவரது அறையில் தங்கியிருக்கும் கௌரவ் என்பவர் நடந்ததைக் கண்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி விஷு உயிரிழந்துவிட்டுள்ளார். மறுநாள் இந்தியாவிலிருக்கும் விஷுவின் பெற்றோரை அழைத்த கௌரவ், அவர்களுடைய பிள்ளை இறந்த செய்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
விஷு, 2022ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றுள்ளார். பின் ஓராண்டுக்குப் பின் பிரான்ஸ் சென்ற விஷு, ராணுவப் பயிற்சி பெற்று பிரான்ஸ் ராணுவத்தில் ஓராண்டு பணியாற்றியுள்ளார்.
அதன்பின் ஜேர்மனிக்குச் சென்ற விஷு, பொருட்கள் டெலிவரி செய்யும் வேலையைத் துவங்கி, பின் தனக்குக் கீழ் பலர் வேலை செய்யுமளவுக்கு தன் வேலையை விரிவாக்கம் செய்துள்ளார்.
விஷு தீபாவளிக்கு இந்தியா வர இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், பெற்றோரும் உறவினர்களும் அவர் வருவார் என காத்திருக்க, மகன் உயிரற்ற உடலாகத்தான் இந்தியா திரும்புவான் என்னும் செய்தி கேட்டு அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இதற்கிடையில், விஷுவைக் கத்தியால் குத்தியது யார், எதற்காக அவர்கள் அவரைத் தாக்கினார்கள் என்பது குறித்த விடயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |