இந்திய அணி பயப்பட வேண்டியதில்லை! நியாயமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும்.. ஜாம்பவான் ஷோயிப் அக்தர் கிண்டல்
சிறந்த கிரிக்கெட் அணியான இந்தியா நியாயமான ஆடுகளத்தை பயன்படுத்த வேண்டும் என ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டி 2 நாட்களிலேயே முடிவடைந்தது. ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே ஸ்கொயராக சுழற்பந்து டர்ன் ஆகும் வகையில் தயார் செய்யப்பட்டதாக விமர்சனம் எழும்பியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அகமதாபாத் ஆடுகளம் குறித்து கூறுகையில் 3-வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தியது போன்ற ஆடுகளத்தில் விளையாட வேண்டுமா? ஆடுகளம் மிகப்பெரிய அளவில் டர்ன் ஆகியது. போட்டி 2 நாட்களில் முடிவடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதுபோன்ற சாதகம் மிகவும் அதிகமானது. இந்தியா 400 ரன்கள் அடித்து இங்கிலாந்து 200 ரன்னில் ஆட்டமிழந்தால், இங்கிலாந்து மோசமாக விளையாடியது என்று கூறலாம். இந்தியா 145-க்குள் ஆட்டமிழந்தது.
இந்தியா மிகப்பெரிய, சிறந்த அணி. இந்தியா இங்கிலாந்தை இன்னும் வெல்ல முடியும் என்பதால், நியாயமான விளையாட்டு, நியாயமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். இந்தியா பயப்பட வேண்டியதில்லை. இந்தியாவுக்காக இப்படிபட்ட ஆடுகளம் தயார் செய்ய வேண்டியதில்லை.
நியாயமான ஆடுகளம், கண்டிசனில் விளையாடினால் எல்லா இடத்திலும் வெல்லலாம் என கூறியுள்ளார்.