இந்தியாவிலும் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை? மாநிலங்கள் ஆலோசனை
சிறுவர்கள் சமூகஊடகம் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக 2 இந்திய மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றன.
சிறுவர்கள் சமூகஊடகம் பயன்படுத்த தடை
சிறுவர்கள் அதிகளவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் அவர்களின் மனநலன் மற்றும் திறன்களில் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து பல்வேறு உலக நாடுகளும், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளன.
ஏற்கனவே 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது. புதிதாக யாரும் கணக்கு தொடங்க முடியாது எனவும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கணக்குகள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அதே போல், 15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா இன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றியுள்ளது.
இந்திய மாநிலங்கள் ஆலோசனை
இதே போல், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக இந்திய மாநிலங்களும் ஆலோசித்து வருகின்றன.
சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா லோகேஷ், "குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட சிறுவர்களால், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

எனவே இது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது அவசியம். சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என பேசியுள்ளார்.
ஆந்திராவை தொடர்ந்து கோவாவும் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
இது குறித்து பேசிய கோவா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் காண்டே, "அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு சமூகஊடகங்களை தடை செய்த மாதிரியை ஆய்வு செய்து வருகிறோம்.

முடிந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இதேபோன்ற தடையை அமல்படுத்துவோம்.
மாநில அளவில் தடையை அமுல்படுத்துவது குறித்த சட்ட மற்றும் நடைமுறையில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இறுதி முடிவு எடுக்கும் முன்னர் மாநில முதல்வரிடம் கலந்தாலோசிப்போம்." என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டே இது போன்ற தடைகளை இந்தியாவில் அமுல்படுத்துவது குறித்த சாத்தியகூறுகளை ஆய்வு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |